“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த ரவுடியிசத்தைத்தான் தீர்வு என்று வழங்க முடிந்தது. ஜனாதிபதியாகும் முன்னர், “யுத்தம் செய்து புலிகளைப் பரலோகம் அனுப்பிப் பிரச்னையை முடிப்பேன்.” என்று என்றைக்கும் சொன்னதில்லை. அவரோடு அரசியல் கூட்டணியில் அப்போது இருந்த ஜே.வி.பி.யும், சிங்கள இனவாதக் கட்சிகளும் அவரை யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் இழுத்து வந்தன. எல்லாம் முடிய அவரும், அவர் குடும்பமும் முழு யுத்த வெற்றியின் நாயகர்களாய் ஜொலித்தது தனி எபிசோட்.
இதேபோலத்தான் முஸ்லிம் விவகாரத்தில் மகிந்தவைப் புரிந்து கொள்வதும். அவருக்கும் முஸ்லிம்களிற்குமிடையில் எந்தவொரு நிரந்தரப் பகையும் இருந்ததில்லை.1970-களில் இலங்கையின் கல்வி அமைச்சராய் பதியுதீன் மொஹம்மட் என்ற அனைத்துச் சமூகத்திற்கும் பெரும் பங்காற்றிய அரசியல்வாதி இருந்த காலத்தில் அவரோடு மிக நெருக்கமாய் இருந்தவர் மகிந்த. தமது தொகுதியின், மாவட்டத்தின் ஆசிரிய நியமனங்கள் முதல் அத்தனை தேவைக்கும் அவரைத் தேடியே முதலில் ஓடுவார் மகிந்த. அதுமட்டுமல்ல…. இலங்கை – பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பாத்திரத்தையும் மகிந்த ஏற்றிருந்தார். பலஸ்தீன சால்வையை இலங்கையில் அதிகம் பாவித்த சிங்கள அரசியல்வாதி மகிந்ததான். அதில் சந்தேகமே இல்லை. இதுதவிர, மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான அடிக்கடி விஜயங்கள், தென்னிலங்கை முஸ்லிம் ரத்தினக்கல் வியாபாரிகளுடனான நட்புறவு என்று அவரது அரசியல் அத்தியாயத்தில் மேலும்சில பக்கங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து மகிந்த என்பவர் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்ட தலைவர் என்ற விம்பத்தை உலகத்திற்குப் பறையடித்துச் சொல்லின.
இப்பேர்பட்ட மகிந்தவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வெறுத்து ஒதுக்க அவரது 2010 – 2014 ஆட்சி காரணமானது. காரணம், இங்கேயும் பிழைப்புக்கு ரவுடி கோட்பாட்டுப்படி அவரும், அவரது குடும்பமும் மோடி ஆட்சியே தோற்றுப் போகும்படி மிகத் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்ததுதான்.
Add Comment