14. குரைக்கிற நாய் கடிக்காது
குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள் அவர்களது பேச்சுக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பதாகும். தேவையில்லாமல் அதிகம் சத்தம் போடுவதில் நாயுடன் போட்டி போடும் தரத்தில் வேறு மிருகங்கள் இல்லை என்றே சொல்லலாம்.
எருமையின் குணமோ நாய்க்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். சத்தம் எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதில் எருமை சிறந்ததாகும். ஆனாலும் எருமை தனது உடல் மொழி மூலம் பல செய்திகளை மற்றைய எருமைகளுக்கும் அதனைத் தாக்க வரும் மற்றைய மிருகங்களுக்கும் சொல்லக் கூடியது. தலையை நிமிர்த்தி அதிகாரத் தோரணையுடன் நிற்கும் எருமை யார் அந்த எருமைக் கூட்டத்தில் பெரியவன் என்பதைத் தனது உடல் மொழியால் மற்றைய எருமைகளுக்குக் காட்டுமாம். அதே போல் சிங்கம் போன்ற எதிரிகளைக் காணும் போதும் எருமை சத்தம் போடுவதில்லை. தனது உடல் மொழியாலேயே தனது பலத்தை வெளிக்காட்டும் குணம் கொண்டதாகும்.
அதற்காக எருமைகள் சத்தமே போடாத மிருகங்கள் என்றில்லை. அவை தேவையற்று வீணாகச் சத்தம் போடுவதில்லை. ஆபத்தில் உள்ள எருமை கொடுக்கும் குரலுக்கு மற்றைய எருமைகள் பதிலளிக்கும் விதமாக அங்கு வந்து ஆபத்தில் இருக்கும் எருமையைக் காப்பாற்றுவது உண்டு. முக்கியமாக இளம் எருமைக் கன்று சிங்கம் புலி போன்ற வேட்டையாடும் மிருகங்களிடம் சிக்கும்போது அவலக் குரலை எழுப்பும். அதற்கு அக்கன்று உறுப்பினராக இருக்கும் எருமைக் கூட்டமே பதிலளிக்கும் முகமாகத் திரண்டு வந்து காப்பாற்ற முயற்சி செய்யும்.
Add Comment