19. நிதானம் நிம்மதி கொடுக்கும்
எருமைகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தால் அவை புற்களை மேய்வது, பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு அசை போடுவது, தேவைப்படும்போது சேற்றில் புரள்வது என்றுதான் இருக்கும். ஓரிடத்தில் இருந்து உணவையோ, நீரையோ தேடி இன்னும் ஓரிடத்திற்குச் செல்லும் போதும் வேகமாகச் செல்வதில்லை. நிதானமாக நடந்தே செல்வதை அவதானிக்கலாம். இதிலிருந்து நாம் இரண்டு பண்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். முதலாவது பண்பு, தமது வாழ்வுக்குத் தேவையான செயல்களில் மட்டுமே தங்கள் சக்தியைச் செலவிடுகின்றன. தேவையற்ற காரியங்களில் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவதில்லை. இரண்டாவது பண்பு அவசரப்படாமல் நிதானமாகச் செயற்படுதல். இவ்விரண்டு பண்புகளும் மனித வாழ்வுக்கும் மிகவும் உபயோகமானவை.
பொதுவாக, நேரமில்லை, என்னால் சமாளிக்க முடியவில்லை என்று மன அழுத்தத்தோடு வாழ்வோரைப் பாருங்கள். அவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் பல தேவையற்ற விஷயங்களில் விரயம் செய்வதைக் காணலாம். ஆனால் அவர்கள் அதனை உணர்வதில்லை. அவர்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்காமல் ஒரு நாள் ஆறுதலாக இருந்து எங்கு தங்கள் நேரம் செலவிடப்படுகிறது என்று கூர்ந்து கவனித்தால் அவர்களது அவசர வாழ்க்கைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர முடியும்.
இதற்கு உதாரணமாக இங்கிலாந்தில் வாழும் ஒரு குடும்பத்தைப் பார்க்கலாம். அப்பா அம்மா இருவரும் அவர்கள் தொழில் புரியும் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். உயர் பதவிகள் அதிக வருமானத்தைக் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் அதற்கேற்ற பொறுப்புகளையும் கொடுக்கும். இந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். மூத்த மகள் எட்டாம் வகுப்பும் இளைய மகன் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். இரண்டு பிள்ளைகளின் பள்ளிக்கூடங்களும் வீட்டிலிருந்து எதிரெதிர் திசையில். ஒன்றும் நடந்து போகக் கூடிய தூரமில்லை. இதனால் இவர்கள் வார நாள்களில் பிள்ளைகளைக் காலையில் கொண்டு போய் விடுவது யார் என்று முந்தைய நாளிரவு முடிவெடுத்துச் செயல்படுவர். இது பொதுவாக யாரால் அன்று வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும் என்பதையும் காலையிலும் மாலையிலும் முக்கியமான மீட்டிங்குகள் இருக்கின்றனவா என்பதையும் பொறுத்தது. அப்பப்போ இவர்களால் முடியாத போது பிள்ளைகளின் பள்ளிக்கூடப் பயணங்களுக்கு நண்பர்களின் உதவிகளையும் நாடுவது உண்டு.
Add Comment