மறு வடிவமைப்பு
எமது உணர்வுகளைத் தூண்டிக் கோபம் வர வைப்பவர்களில் நமது குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டும் தனி உரிமை எடுத்துக் கொள்வதில்லை. நம்முடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் நமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களும் அவர்கள் செயல்கள் மூலம் எமக்குக் கோபம் வர வைப்பது உண்டல்லவா. சக ஊழியரிடமோ அல்லது அறிமுகமற்றவரிடமோ நமக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்? எதுவும் இருக்கக் கூடாது. ஆனாலும் நாம் அனைவரும் நமது சமூகக் கட்டுப்பாடுகளுக்கமைய மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனும் பொது எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறோம். அந்த எதிர்பார்ப்புத் தவறாகும் போது நமது தன்மானம் பொங்கிக் கொண்டு கோபமாக வெளியே வருகிறது.
பொதுவாக மற்றவர்கள் நமக்கு மரியாதை தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதில் தவறில்லை. ஆனாலும் எங்கு நம் மரியாதையை நிலை நாட்டப் போராட வேண்டும், எங்கு கண்டு கொள்ளாமல் போக வேண்டும் என்பதைச் சரியாகக் கணித்தோமானால் நமது வாழ்வில் வரக் கூடிய தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம். இதற்கான சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஒரு சக ஊழியர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறார். அதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நாம் அவ்விடத்தில் எருமை மாடு போல் இருந்தால், அவர்கள் அதனைப் பலவீனமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து தொந்தரவுகள் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. அதற்காக அவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்பதை அமைதியாகச் சொல்லிப் பார்க்கலாம். அதற்கும் கேட்கவில்லை என்றால் மேலிடத்தில் முறையீடு செய்யலாம்.
Add Comment