5. அதிர்ஷ்டம்
அவன் அதிர்ஷ்டம் உள்ளவன். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்படியான வார்த்தைகளைப் பலதடவைகள் நாம் கேட்டிருப்போம். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று சிந்தித்திருக்கிறோமா?
முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னவென்பதற்கு ஓர் உதாரணம் பார்ப்போம். இங்கிலாந்தில் இரு நண்பர்கள் உள்ளனர். அதில் முதலாம் நண்பர் இங்கிலாந்தில் லொட்டோ என்று சொல்லப்படும் லாட்டரிக்கு ஒரு சீட்டு வாங்குகிறார். அதற்கு அவர் ஒன்றிலிருந்து ஐம்பத்தொன்பது வரையுள்ள இலக்கங்களில் ஆறு இலக்கங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றைத் தனது அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் என அவர் கருதும் எண்களை அவராகவே தெரிவு செய்யலாம். அல்லது லாட்டரிக் கணினியிடம் அவர் சார்பாக அந்த ஆறு இலக்கங்களையும் தெரிவு செய்து தரும்படியும் கேட்கலாம். எப்படித் தெரிவு செய்யப்பட்டாலும் அவருக்குக் கொடுக்கப்படும் லாட்டரி டிக்கெட்டில் அந்த ஆறு இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். வாரத்தில் இரு நாள்கள் அந்த லொட்டோ தேர்வுகள் நடைபெறும். ஒரு பெரிய இயந்திரத்தில் ஒன்று முதல் ஐம்பத்தொன்பது வரையிலான இலக்கங்களைக் கொண்ட பந்துகள் உருளும். அவற்றிலிருந்து ஆறு பந்ந்துகளை அவ்வியந்திரம் வெளியே அனுப்பும். இந்த ஆறு பந்துகளில் உள்ள இலக்கங்களே அன்றைய லொட்டோ தேர்வுக்கான வெற்றி பெறும் இலக்கங்கள்.
நாம் குறிப்பிட்ட முதலாம் நண்பர் தெரிவு செய்த ஆறு இலக்கங்களும் லொட்டோ தேர்வில் தெரிவு செய்யப்பட்ட ஆறு இலக்கங்களும் ஒரே இலக்கங்களாக இருக்கின்றன. அதனால் அவர் அந்த தேர்வுக்கான ஜாக்பொட் பரிசைப் பெறுகிறார். இந்த ஜாக்பொட் பரிசு பல மில்லியன் பவுண்ட்ஸ்களாகும். அந்த வெற்றியின் மூலம் அவர் திடீரெனக் கோடீஸ்வரராகி விடுகிறார். தேர்வின் போது லாட்டரி இயந்திரம் தெரிவு செய்யும் இலக்கங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு அவருக்கு இல்லை. ஆகவே அவரது வெற்றி முழுமையாக அதிர்ஷ்டமே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
நன்றி