7. வாழ்ந்து காட்ட வேண்டுமா?
எல்லோரும் நல்லவரே என்று நாம் அடிப்படையாகக் கருதுவது நமது மனநிலையை நல்ல நிலையில் பேணுவதற்கு நல்லது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பதனைச் சில பேர் நமக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டுவர். அவர்களது நோக்கம் நல்லதல்ல என்பது எமக்குத் தெளிவாகவே தெரியும் போது போலியாக அவர்களை நல்ல நோக்கம் கொண்டவர்கள் என்று எமது மூளைக்குச் சொல்ல முடியாது. ஆகவே நாம் அவர்களது அதீத முயற்சிக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் நல்லவர்கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது.
மற்றவர்கள் நல்லவர்கள் அல்லர் என்பதற்காக நாமும் அவர்கள் தரத்துக்குப் போக வேண்டிய தேவை இல்லை. நமது எருமைத் தோலை அணிந்து கொண்டு அவர்களது செயல்களாலோ அல்லது வார்த்தைகளாலோ நமக்குப் பாதிப்பு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் உங்களைக் குறைவாகப் பேசுகிறார். அல்லது இழிவு படுத்தும் முறையில் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்றால் அவரது நோக்கம் எமது தன்மான உணர்ச்சியைத் தூண்டுவதே. அந்த உணர்ச்சியை நாம் வெளிக்காட்டும் போது அவர்களுக்கு ஒரு குரூர மனத் திருப்தி கிடைக்கும். அந்தத் திருப்தி தரும் போதையினை நாம் அவர்களுக்குக் கொடுத்து விட்டால் அவர்கள் தொடர்ந்து அதற்காக நம்மைப் பயன்படுத்தத் தவற மாட்டார்கள்.
ஓர் உதாரணம் பார்ப்போம். பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் சார் கல்வி கற்காது ஒரு கலைப் பாடம் ஒன்றைக் கல்லூரியில் கற்கும் ஓர் இளைஞனை ஓர் உறவினர் காண்கிறார். “என்ன படிக்கிறாய்?” என்று கேட்கிறார். இளைஞனின் பதில் அவர் முகத்தில் ஏளனம் கலந்த புன்னகையை வர வைக்கிறது.
Add Comment