‘புற்றுநோய்க்கான தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி விட்டோம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வந்து விடும். அதை நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ரஷ்யா.
போலியோ, சின்னம்மை, பெரியம்மை போன்ற சென்ற நூற்றாண்டு நோய்களில் தொடங்கி சமீபத்தில் அச்சுறுத்திய கொரோனா வரை ஏராளமான வியாதிகளைத் தடுப்பூசி போட்டுத்தான் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் அதிதீவிரமான பாதிப்புகளை உண்டாக்கும் ஆதிகால நோயான புற்றுக் கட்டிகளுக்கு இன்று வரை தடுப்பூசியோ, முறையான மருந்துகளோ கண்டுபிடிக்கப் படவில்லை. முதன்மைக் காரணம், நோய் உருவாகும் சிக்கலான முறை.
கொரோனா, அம்மை நோய் போல வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியாக்களினால் புற்றுநோய் ஏற்படுவதில்லை. நம்முடைய உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. அவற்றில் சில செல்கள் மரபணு மாற்றங்களின் காரணமாகக் கட்டுப்பாடற்றுப் பெருகுவது, தனக்கான காலம் முடிந்தும் மரணமடைய மறுப்பது, மற்ற செல்களுக்கு வேண்டிய சக்தியை உறிஞ்சிக் கொண்டு எல்லா இடங்களுக்கும் பரவி அசாதாரணமாகச் செழித்து வளருவது எனச் சொந்த உடலுக்கே வில்லனாக மாறிவிடும். இந்த நிலையைத்தான் புற்றுநோய் என்கிறோம். உடல் செயல்களுக்குள்ளாகவே மாற்றங்கள் நிகழ்வதால் பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.
Add Comment