சென்னையின் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மத்திய ரயில்வே துறையின் ஒப்புதலையடுத்து, இந்த இணைப்பு தொடர்பான நிபந்தனைகளும் விதிமுறைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பறக்கும் ரயில் சேவையைக் கட்டுப்படுத்தவுள்ளது.
MRTS என்று அழைக்கப்படும் பறக்கும் ரயில் சேவை, 1997ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. நாட்டின் முதல் உயர்மட்ட ரயில் தடம் என்ற புகழ் கொண்டது. அதோடு, நாட்டின் நீளமான உயர்மட்ட ரயில் தடம் (17 கிமீ) என்ற பெருமையையும் சேர்த்துச் சுமக்கிறது. ஆனால் பறக்கும் ரயில் நிலையங்களின் இன்றைய நிலை இதுபோன்ற சிறப்புகளைப் பிரதிபலிப்பதாக இல்லை.
MRTS ரயில் நிலையங்களைப் பார்க்கும்போது பாழடைந்த பேய் வீட்டின் நினைவு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. இரவு நேரங்களில் இந்த உணர்வு இன்னும் அதிகமாக இருக்கும். ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் இருட்டும், குறைவான மக்கள் நடமாட்டமும் பறக்கும் ரயில் நிலையங்களைப் பாதுகாப்பற்றவையாக மாற்றியுள்ளன. இந்நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வழிப்பறிகளும், பெண்களிடம் அத்துமீறல்களும் தொடர்ந்து அரங்கேறியவண்ணம் உள்ளன.














Add Comment