திரைப்படங்களில் மினிமலிசம் என்ற கோட்பாடு பல வருடங்களாக இருந்து வரும் விஷயம்தான். ஆனால் அது அதிகமாகப் பொது வெளியில் பேசப்படுவதில்லை. மினிமலிசம் என்பது எது தேவையோ அது மட்டும் இருப்பது. அதைவிடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிதளவு கூட அதிகமாக இருக்கக் கூடாது. இந்தக் கோட்பாடுகள் திரைப்படங்களில் எங்கெங்கே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. எப்படி அது முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஒரு காட்சி திரையில் விரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள காமிரா கோணங்கள், நடிகர்களின் உடலசைவுகள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒளியின் அளவு, பேசப்படும் வசனங்கள், அமைதி எல்லாமே அதில் வரும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகப் பாலு மகேந்திராவின் பல படங்களைச் சொல்லலாம். குறிப்பாக வீடு, சந்தியா ராகம். மிகக் குறைவான வசனங்கள். பாத்திரங்கள். காட்சிகள்.
அனாவசியமாகக் காமிரா அலைபாய்வதோ, ஓடுவதோ இருக்காது. காட்சிகளின் நீளம் சற்று அதிகமாகத் தெரிவது இந்தக் குறைந்தபட்சச் செயல்பாட்டால்தான். வீடு படத்தில் சொக்கலிங்க பாகவதர் தங்களது வீட்டைப் பார்ப்பது போல ஒரு காட்சி வரும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீளும் அந்தக்கட்சியில் அவர் மட்டுமே. அந்த வீடும் ஒரு பாத்திரம். பின்னால் இளையராஜாவின் வயலின் இசை (How to Name it) துணையிருக்க ஒவ்வொரு அறையாக அவர் சென்று பார்ப்பார். அது ஒரு செங்கல் கட்டடம் மட்டுமே. விளக்குகள் கிடையாது. இருட்டிக் கொண்டிருக்கும் வானம், அதில் உள்ள வெளிச்சம் மட்டுமே. அவர் செல்லும் இடங்களில் காமிரா செல்லும். அவர் பார்வையில் அது பார்க்கும். அவ்வளவே.













Add Comment