சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகப் பெரும் அச்சுறுத்தலாக நம் முன் வளர்ந்து நிற்கிறது. இதற்கு மனிதர்களாகிய நாம் மட்டுமே முழு முதற்காரணம். இதற்கு நல்லதொரு தீர்வு காணவும் நம்மால் முடியும். அதற்கு மினிமலிசம் எனும் கோட்பாடு நம் வாழ்வியல் முறையாக மாற வேண்டும்.
மினிமலிசம் என்பது கஞ்சத்தனமான பற்றாக்குறை வாழ்க்கை வாழ்வதன்று. தேவையற்றதை அகற்றுவது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் தேவையற்றதை உருவாக்காமல், உற்பத்தி செய்யாமல் இருப்பது. நம் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இப்புவியின் சூழலையும் அதில் வாழும் பிற உயிரினங்களின் நலத்தையும் மதிக்கும் பண்புடன் வாழ்வது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் தொடங்கிய தொழில் புரட்சி இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அசுர வளர்ச்சியடைந்து உலகம் முழுவதையும் தன் பிடியில் வைத்துள்ளது. அதுவரை மனிதரின் கைகள் உருவாக்கிய பொருள்களைத் தொழிற்சாலையின் இயந்திரங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கின. இயந்திரங்களின் உற்பத்தித்திறன் பெருகப் பெருக, செய்யப்படும் பொருள்களை எப்படியாவது விற்றாக வேண்டிய கட்டாயம் உருவானது. தொழிற்சாலைகளின் கட்டற்ற வளர்ச்சி கட்டற்ற நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவித்தது. கட்டற்ற நுகர்வு காலூன்றிய பின் அதுவே கட்டற்ற உற்பத்திக்கு காரணமாகிப் போனது. இவை இரண்டும் சேர்ந்ததால் புவியின் சூழல் பாழாகியது.















Add Comment