கடலோரப் பகுதிகளில் மாசு அதிகரிக்கிறது என்பதற்காக அங்கே குடியிருக்கும் மக்களை இடம் மாற்றச் சொல்கிறது அரசு. காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைக் காலிசெய்ய முடியாது என்று மக்கள் அடம்பிடிக்கிறார்கள். மறுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டவேண்டும் என்கிறது அரசு. முன்னோர்கள் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த அப்பாவி மக்களை வெளியே போ என்று சொல்லும் அரசாங்கம், அதே கடலோரப் பகுதிகளில் விலையுயர்ந்த பீச் வியூ ஹோட்டல்களை மட்டும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறதே என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள்.
இது மாவீரன் திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல. மத்திய அமெரிக்காவிலுள்ள கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நிஜம். சென்னை ராயபுரம் முதல் கோஸ்டா ரிக்கா வரை இதே பிரச்சினைதான் என்று பொத்தாம் பொதுச் செய்தியாக இதைக் கடந்துவிட முடியாது. இதற்குப் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு உள்ளது.
ஒரு பக்கம் பசிபிக் பெருங்கடலையும், மறுபக்கம் கரீபியன் கடலையும் கொண்ட சொர்க்கப் பூமி கோஸ்ட்டா ரிக்கா. வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் நீண்ட கழுத்துபோல் காட்சியளிக்கும் நிலப்பரப்பை இஸ்துமஸ் என்று அழைப்பார்கள். இப்பகுதியில் ஏழு நாடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்நாடுகளை ஒன்றாக மத்திய அமெரிக்க நாடுகள் என்று அழைப்போம். இந்த ஏழு நாடுகளில் ஒன்றுதான் கோஸ்ட்டா ரிக்கா.














Add Comment