நாட்டையே அதிரவைத்த தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்திய முகமூடி மனிதரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்றும், அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் சொல்லியதால் இதைச் செய்ததாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், கர்நாடக மாநிலத்திலுள்ள தர்மஸ்தலா கோவிலின் முன்னாள் துப்புரவுப் பணியாளர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், ‘1998 முதல் 2014 வரை கோவிலை நிர்வகிக்கும் சிலர் சொல்லியதால் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்’ என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தன் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு மண்டை ஓட்டையும் சமர்ப்பித்தார். இந்தச் செய்தி தேசிய அளவில் பரபரப்பானது. இக்குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும், பொதுமக்களின் அழுத்தத்தையும் கருத்தில் கொண்ட கர்நாடக அரசு, 24 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.














Add Comment