கன்னித் தீவு தொடர்கதையாகத் தொடர்கிறது, ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள். இம்முறை ஜி7 மாநாட்டையொட்டி, செமிகண்டக்டர்கள் போன்ற இன்னும் பல முக்கியத் தொழில்நுட்பப் பொருட்கள் மீது சிறப்புத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே சீனா, மத்தியக் கிழக்கு நாடுகளின் வங்கிகளும், மின்னணு நிறுவனங்களும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேதாளம் மறுபடி முருங்கைமரம் ஏறிவிட்டதால், அதைச் சுமந்து கொண்டே ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். மாஸ்கோ நிதிச் சந்தையில் இனி டாலர் மற்றும் யூரோ வர்த்தகப் பரிமாற்றம் நடைபெறாது. டாலர், யூரோவில் வர்த்தகம் செய்பவர்கள் சில்லறை வியாபாரம் போல, அவரவர் செய்து கொள்ளலாம். மாஸ்கோ நிதி நிறுவனம் போன்ற நாட்டின் நம்பகமான மத்திய நிறுவனங்களின் மேற்பார்வையில் இந்தப் பரிவர்த்தனைகள் இனி நடைபெறாது. இதுவரை கிடைத்த ஆதாயங்கள் குறைந்து, இதற்காகும் செலவும், கமிஷனும் ஏறக்கூடும்.
ரஷ்ய, உக்ரைன் மக்களின் சேமிப்புகள் பெரும்பாலும் டாலர்களில் தானிருக்கும். நம்மைப்போல உள்ளூர் ரூபாய்களில் சேமித்துவைக்கும் பழக்கம் அங்கு மிகக்குறைவு. அவ்வப்போது வீழும் உள்நாட்டு நாணயத்தின் சந்தை விலைக்குப் பயந்து, இப்படியொரு முன்னேற்பாடு. இப்போதையத் தடையால், சேமிப்பிற்கு எந்தப் பாதிப்பும் வராது என்கிறது அரசாங்கம். ஏனென்றால் வங்கிகள், நிறுவனங்கள், தனியார் என அனைவரும் சில்லறை வணிகத்தில் ஈடுபடலாம்.
Add Comment