உங்கள் துறையில் பல ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருப்பவர் நீங்கள். பல லட்சம் டாலர்கள் சம்பளம் வரும் வேலைக்கான நேர்காணலைச் சிறப்பாகச் செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டீர்கள். ஆனால் இந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்திடம் இருந்து உங்களை நிராகரித்துவிட்டோம் என்ற பதில் வருகிறது. உங்களுக்கு ஏன் என்றே புரியவில்லை. பின்னர் விசாரிக்கும் போது காரணத்தைத் தெரிந்து கொள்கிறீர்கள். அன்று நேர்காணலை முடித்துவிட்டு உங்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட அவர்களது ஓட்டுநரிடமும் உங்களை மதிப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் நீங்கள் செருக்காக நடந்து இருக்கிறீர்கள், அதனால் உங்களுக்குக் குறைவான மதிப்பெண்களை அவர் கொடுத்திருக்கிறார். அந்த நிறுவனம் டுவோலிங்கோ.
டுவோலிங்கோ (Duolingo) செயலியின் நிறுவனம் என்றைக்கும் திறமையை மட்டுமே பார்த்தது இல்லை. இரு மொழி என்பதைக் குறிக்கும் பெயர் டுவோலிங்கோ. 2009ஆம் ஆண்டு நிறுவனத்தைத் தொடங்கிய காலத்தில் இருந்தே டுவோலிங்கோவில் பணிச் சூழல் அழுத்தமாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இன்றைக்கு உலகளவில் 200 கோடிக்கும் அதிகமானோர் தாய் மொழியைத் தாண்டி, இரண்டாவதாக ஒரு மொழியைக் கற்கிறார்கள். அதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ஆங்கிலத்தைக் கற்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இப்படி இரண்டாவதாக ஒரு மொழியைச் செல்பேசி செயலி மூலம், ஒரு விளையாட்டைப் போலச் சொல்லிக்கொடுக்கும் செயலி டுவோலிங்கோ. இதன் பயனர்களில் 94 சதவிகிதத்தினர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது என்பது இதன் சிறப்பு.
Add Comment