கேரள மாநிலம் வைக்கத்திலிருக்கும் மஹாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாதென்ற நடைமுறை பலகாலமாக இருந்தது. இதை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது ஒரு போராட்டம். அதற்கு “வைக்கம் போராட்டம்” என்று பெயர். அஹிம்சை வழியில் நடந்த இந்தப் போராட்டம் முடிவுக்கு வர ஓராண்டுக்கும் மேலானது. இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், வழிபாட்டுத் தீண்டாமை தொடர்பான பிரச்னையொன்று தமிழ்நாட்டில் சர்ச்சையாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்ற கிராமத்திலிருக்கிறது திரௌபதி அம்மன் கோயில். கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி தீ மிதித் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவின் ஏழாவது உபயம் ஆதிதிராவிடக் காலனி மக்களின் உபயம். அன்றைக்கு அந்தக் கோயிலுக்கு வழிபடச் சென்ற ஆதிதிராவிட இளைஞர் ஒருவரை இன்னொரு இனத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். அவருடைய குடும்பத்தினரும் எச்சரிக்கப்பட்டதோடு தாக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், சுமூகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இப்போது இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்னை தீவிரமடைந்திருக்கிறது. அந்தக் கிராமத்தில் அசாதாரணமான சூழல் நிலவியது. பொது அமைதியைக் காக்கக் கடந்த ஜூன் 7-ஆம் தேதி போலீஸ் பாதுகாப்போடு கோயிலை மூடி சீல் வைத்துள்ளனர் மாவட்ட நிர்வாகத்தினர். இரண்டாயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
அருமை பாண்டியராஜன்