செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். மிகுந்த மகிழ்ச்சியுடன், நம் அனைவரின் கடின உழைப்பிற்குப் பயன் கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். டெல்லிப் பிரகடனம், அனைத்து தலைவர்களாலும் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவின் மீது ஜி 20 நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெற்றியாகும். இதைச் சாத்தியப்படுத்திய அனைத்து ஷெர்பாக்களுக்கும் வாழ்த்துகள்.
டெல்லிப் பிரகடனம் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற அறிவிப்பை உலகம் சற்று வியப்பாகத்தான் பார்த்தது. போர் குறித்த நிலைபாடுகளில் பாலி கூட்டத்தில் நிகழ்ந்த அலப்பறைகள் நினைவிருக்கும். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஷெர்பா கூட்டத்தில்கூட இது குறித்து எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை, கடந்த வெள்ளிக்கிழமை வரை இழுபறி என்ற நிலையில், மாநாட்டின் முதல் நாளிலேயே அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதென்றால், அப்படி அதில் என்ன அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.? முக்கியமாக ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில்?
முப்பத்தேழு பக்கங்கள். எண்பத்து மூன்று பத்திகள். தீவிரவாதம், போர், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, நிலையான வளர்ச்சித் திட்டம், பாலினச் சமநிலை, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரச் சீர்திருத்தங்கள், கால நிலை பாதுகாப்பு, டிஜிட்டல் வளர்ச்சி கட்டமைப்பு என அனைத்தும் பேசப்பட்டிருந்தது.
Add Comment