நவீன சாத்தியங்கள்
‘இவன் ஜாயின் பண்ணப்போற கம்பெனில இன்னிக்கு ஒரு ஆன்லைன் டிரெயினிங் சொல்லிருந்தாங்க. அக்கறையா ஃபோன் பண்ணி விசாரிச்சா, நீ என்ன ஸ்கூல் டீச்சரா அட்டெண்டென்ஸ் எடுக்கன்னு நக்கலா கேக்கறான்.’ சித்ரா மேடம் தன் ஜென் ஸீ மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். அலட்சியமாக இருந்து பயிற்சி வகுப்பை மறந்துவிடப் போகிறானோ என்று இவருக்குப் பயம்.
இப்படித்தான் அவன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது இரண்டு மாதங்கள் விடுப்பு கேட்டார்.
‘பரீட்சை எழுதப் போறது அவன், உங்களுக்கு எதுக்கு ரெண்டு மாசம் லீவு?’ என்று கேட்ட மேனேஜரிடத்தில், ‘பிளஸ் டூன்னா என்னன்னு தெரியுமா? தாய்ப்பாசம்னா என்னன்னு தெரியுமா?’ என எமோஷனலாகச் சண்டை போட்டு விடாப்பிடியாக ஒன்றரை மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டார்.
தன் மகன் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து ஐஐடி, என்ஐடி போன்ற புகழ்மிக்கக் கல்லூரிகளில் சேரவேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால் அவன் பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிக்கப் போவதாகச் சொல்லிவிட்டான்.
‘ஏண்டா, சயன்ஸ் குரூப் எடுத்துட்டு இன்ஜினியரிங் படிக்க மாட்டேங்கற? நீ படிக்கறத்துக்காக எவ்ளோ வசதி பண்ணிக் கொடுத்திருக்கோம்? எத்தனையோ நல்லா படிக்கற பசங்க படிக்க காசில்லாம, கரன்ட்டு கூட இல்லாம, கூலி வேலை செஞ்சு தெருவிளக்குல படிச்சு ஐஏஎஸ் ஆகி…’ என அவனிடமும் சென்டிமென்ட்டாகப் பேச ஆரம்பிக்க,
‘படிக்கறத்துக்குப் பணங்காசு மட்டுமில்லம்மா, வயசு கூட ஒரு மேட்டர் கிடையாது. நாப்பது வயசுக்கு மேல படிச்சு பெரியாளானவங்களெல்லாம் இருக்காங்க. நீ வேற தண்டமா ஒன்றரை மாசம் லீவு போட்டிருக்க. வீட்டுல நிறையா வசதி இருக்கு. அதை வேஸ்ட் பண்ணாம ஏதாவது கோர்ஸ் பண்ணு, எக்ஸாம் எழுது, நான் அப்ளை பண்ணித் தரேன்’ என சீரியஸாகச் சொல்லியிருக்கிறான் மகன்.















Add Comment