29. மும்மணிகள்
ஊட்டி கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டபோதே, அதற்கு இணையாக இல்லாவிட்டாலும் மூன்று சிற்றூர்கள் மெல்ல மெல்ல நீலகிரியின் அடையாளங்களாகத் தங்களை வளர்த்துக்கொண்டே வந்தன. இன்று நீலகிரியில் உதகமண்டலத்துக்கு அடுத்தபடியாகச் சுற்றுலாவுக்குப் பெயர் போன சிற்றூர்கள் குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி.
விஷ், கிண்டர்ஸ்லி இருவரும் ஏறி வந்த ஊட்டிக்குப் பாதை தவறிப்போன இடத்துக்குப் பெயர் கோத்தகிரி என்று அப்போது அவர்களுக்குத் தெரியாது. பின்னர் சல்லிவன் ஏறி வந்தபிறகும் அவர்கள் போன பாதையை விடுத்து தும்மட்டி பகுதியில்தான் வந்து சேர்ந்தார். கன்னேரிமுக்கு என்ற அந்தக் கிராமத்தில் தன் முதல் கல்வீட்டைக் கட்டினார். அதற்குச் சற்று மேலே அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் ஆதிக்குடிகளான கோத்தர்கள் வாழ்ந்து வந்த மலைக்கிராமம்தான் கோத்தகிரி.
ஆங்கிலேயர்கள் வந்திறங்கியபோது அவர்களின் கவனம் முழுக்க உதகமண்டலத்தின் கண்டுபிடிப்பு, சாலை வசதிகள், உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது ஆகியவற்றைப் பற்றியே இருந்தது. பிற நகர்களை உருவாக்குவதோ கண்டுபிடிப்பதோ அப்போது அவர்களின் உடனடிச் செயல்திட்டத்தில் இருந்திருக்கவில்லை. தோட்டக்கலை ஆராய்ச்சியில் காபி பயிரிடத் திட்டம் தயாரித்து மலைகளின் மண் ஆராய்ச்சி செய்தபோதுதான் கோத்தகிரியின் மலைச்சரிவுகள் அதற்கு ஏற்றதாக இருக்கும் என்று முதன்முதலில் கோத்தகிரியின் மீது ஆங்கிலேயர்களின் கடைக்கண் பார்வை விழுந்தது.















Add Comment