கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு சுமார் இருபத்தைந்து வருடங்களாகின்றன. ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவையோ, வாங்குவதற்கான காரணங்களோ இன்றுவரை குறைந்து போய்விடவில்லை. விதவிதமான ஆபரணங்கள் வாங்கிப் போடுவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து நொடிகளில் பணம் கொடுக்கும் அடகுக் கடைகளும் மொபைல் செயலிகள் போலப் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன.
கோலார் போலவே ஒரு பிரம்மாண்டமான தங்கச் சுரங்கம் மீண்டும் இங்கே வரப் போகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அமையவிருக்கும் இந்தச் சுரங்கத்திலிருந்து ஆண்டொன்றுக்கு எழுநூற்றைம்பது கிலோ தங்கம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1994ஆம் ஆண்டு கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்தது. ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்னெடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. தங்கத்தை ஆய்வு செய்வதற்குப் பல கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுமென்பதால் எந்த நிறுவனமும் உடனடியாக முன்வரவில்லை. இதையடுத்து 2005ஆம் ஆண்டு சுரங்கக் கொள்கைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
Add Comment