இரும்பை ஈர்க்கும் விசை காந்தத்தில் இருப்பதுபோல விநோதமான நபர்களை ஈர்க்கும் ஒருவித ஈர்ப்பு விசை என் கணவரினுள்ளே இருக்கிறது. விநோத குணம் கொண்ட அற்புதப் பிறவிகள் யாராக இருந்தாலும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் நண்பர்களாகி விடுவார்கள்.
உதாரணமாக என் கணவர் வேலை பார்த்துவந்த அலுவலகத்தில் புதிதாக ஒருத்தர் வேலைக்குச் சேர்ந்திருந்தார். என் கணவரினுள்ளேயிருக்கும் ஈர்ப்பு விசைக்கு அவர் ஒரு அற்புதப் பிறவி என்று தெரிந்து விட்டது. தெரிந்தபின் சும்மா இருக்குமா அந்த ஈர்ப்பு விசை? விளைவு, என்னவருக்கும் அந்த நபருக்கும் இடையே அதிதீவிர நட்புப் பயணம் தொடங்கி விட்டது.
அது பள்ளி விடுமுறை சமயம். நானும் என் மகளும் இந்தியாவில் இருந்தோம். அவ்விருவரின் நட்புப் பயணத்தின் போது ஒரு நிதானத்தை வரவழைக்க ஸ்பீட் பிரேக்கராக என் மகளோ, சிகப்பு சிக்னல் காட்ட நானோ இல்லாத நேரம். ஒரு ரோட்டில் சிக்கலும் இல்லை, ஸ்பீட் பிரேக்கரும் இல்லை என்றால் என்ன நடக்கும்? எல்லா வண்டியும் தாறுமாறாக ஓடி ஏதாவது குட்டிச் சுவற்றில் முட்டிக்கொண்டு நிற்கும். சரிதானே..?
எடுத்த சப்தம் – சபதம் printer’s devil!
விஸ்வநாதன்