அக்பர்- பீர்பாலின் பிரபல நீதிக்கதை ஒன்றில், நாட்டில் மருத்துவர்கள் அதிகமா, நோயாளிகள் அதிகமா என்ற சந்தேகம் அக்பருக்கு வரும். பீர்பால் அதைத்தீர்க்கும் விதமாக அவரை மாறுவேடத்தில் கூட்டிச்சென்று ஊரில் ஒரு நோய் வந்தால், அதைத் தீர்ப்பதற்காக எத்தனைப் பேரிடம் எத்தனை யோசனைகள் உள்ளன என்பதை நேரில் நிரூபிப்பார்.
ஏற்கனவே இப்படி சுயமருத்துவக் கொள்கைதாரிகள் நிறைந்த இந்த உலகு கோவிட் பெருந்தொற்றுக்குப்பின், அதில் இன்னும் தீவிரமாக இறங்கியது. எல்லாவற்றிற்கும் உடனடி மருந்துகள், சித்த மருத்துவப் பொடிகள், கஷாயத் தீர்வைகள் என்று வீடுதோறும் ஒரு மருந்தகக் குடிலை அமைத்துக்கொண்டனர். எது வந்த போதிலும், உடனடியாக ஒரு தீர்வைக் கண்டுவிட்டுத்தான் அடுத்த கணத்தை எதிர்கொள்வது என்று தீர்மானமெடுத்துத் திரிந்தனர்.
ரத்தத்தில் சர்க்கரையை அளக்க ஒன்று, ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ள இன்னொன்று, ஆக்சிஜன் அளவைத் தெரிந்துகொள்ள மற்றொன்று என்று ஆளுக்கொன்றாக கருவிகளையும் விட்டுவைக்காமல் வாங்கிவைத்துக்கொண்டது உலகு.
Add Comment