மனிதநேய மருத்துவர் ரத்தினம் வயது மூப்பினால் காலமானார். ஒரு டீ சாப்பிடச் செல்வது போல பத்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு காய்ச்சலுக்கு வைத்தியம் பார்க்க இக்காலத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியுமா? பட்டுக்கோட்டையில் வாழும் மக்கள் அப்படிச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளில் ஒன்று மருத்துவச் செலவு. சளி, காய்ச்சல்களுக்கு மருத்துவமனைக்குச் சென்றாலும் ஐந்நூறு ரூபாய் செலவாகிவிடும். மருத்துவக் கட்டணமும் மருந்துச் செலவுகளும் ரூபாய் ஐந்நூறு வரும்படி மருத்துவர்கள் திட்டமிட்டுப் பரிந்துரைக்கிறார்களோ என்ற சந்தேகம்கூட வரும். மாதச் சம்பளத்தில் பட்ஜெட் போட்டு வாழும் மத்தியத்தர குடும்பத்தினர்களுக்குத் திடீர் மருத்துவச் செலவு அந்த மாதத்தின் வேறு முக்கியச் செலவைத் தடுக்கும். இது போன்று பெரும் செலவில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களே அதிகமாக உள்ளனர். இவர்களுக்கிடையில் குறைந்த கட்டணத்திலும் அந்தப் பணமும் இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர். ரத்தினம்.
1928ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூரில் பிறந்தார் ‘மனிதநேய மருத்துவர்’ என்றழைக்கப்பட்ட டாக்டர் டிஏகே ரத்தினம். மருத்துவப் பட்டப்படிப்பு படித்துவிட்டு 1958ல் பட்டுக்கோட்டையில் கிளினிக் தொடங்கினார். ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்குச் சிகிச்சையளித்தார். பின்னர் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்தார். பிறகு 1990 முதல் 2020 வரை பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். மூன்று தலைமுறைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார்.















Add Comment