துபாய் எக்ஸ்போ. நூற்றித் தொண்ணூற்றி இரண்டு நாடுகள் கலந்து கொண்ட முதல் எக்ஸ்போ. மொத்த எக்ஸ்போவையும் சுற்றிப் பார்க்காவிட்டால் அந்நாட்டில் நான் வாழ்ந்து என்ன பயன்? அதனால் எக்ஸ்போ தொடங்கும் முதல் நாளிலிருந்தே என் பயணத்தையும் தொடங்கிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். பயணமா என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். உண்மையில் எனக்கு அதுவொரு பெரும் பயணமே. எக்ஸ்போவின் வடக்கு வாசலில் இருந்து தெற்கு வாசலுக்கு நடந்து செல்ல ஒன்றரை மணி நேரம் எடுக்கும். தெற்குவாசலில் இருந்து வடமேற்கு வாசலுக்கு செல்ல இரண்டரை மணி நேரம் எடுக்கும். வெளிச்சுவற்றைச் சுற்றிவர மட்டும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் எடுக்கும்.
நானோ அதிகம் நடந்து என் எடை குறைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கும் பொறுப்பான பெண். தேவைக்கு அதிகமாக ஓரடிகூட நடக்க மாட்டேன். வீட்டில் நாலடி தள்ளி இருக்கும் தண்ணீர் பாட்டிலையே எனக்கு என் மகள்தான் எடுத்துத் தருவாள். என் எடையை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது என்பதில் மிகமிகக் கவனத்துடன் இருக்கிறேன். இப்படியாக என் உடல் எடை மீது எனக்கிருந்த அதீத அக்கறையை உதறித் தள்ளிவிட்டுத்தான் எக்ஸ்போவிற்கு பயணப்பட்டேன். எடையை மீண்டும் கூட்டிக் கொள்ளலாம். எக்ஸ்போ மீண்டும் வருமா? அதனால் வீறு கொண்டு கிளம்பிவிட்டேன்.
Add Comment