தெருக்கோடியில் ஐஸ் வண்டி மணியடித்துக் கொண்டு வரும்போதே அப்பா சொல்லிவிடுவார், ‘ஐஸெல்லாம் கெமிக்கல். தொண்டைல சதை வளரும்!’
சின்னத்தைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு டான்ஸில்ஸ் வளர்ந்து விட்டதாம். வாழும் உதாரணம் ஒன்றையும் சுட்டிக்காட்டிய பிறது என்ன செய்ய முடியும்?
கோடை விடுமுறை நாட்களில் அனல் கங்காய் இறங்கும் மதிய வேளைகளில் தெருவில் நிறைய வீடுகளில் ஐஸ் வாங்குவர். நுனி நாக்கால் சேமியா ஐஸை மெதுமெதுவாக நக்கும் ஸ்ரீதேவி, ஒரு துளிகூடச் சொட்ட விடாமல் முழுவதுமாக பால் ஐஸ் செவ்வகத்தை வாய்க்குள் விட்டு எடுக்கும் ரகு அண்ணா, திராட்சை ஐஸைக் கடித்துச் சாப்பிடும் சுந்தர் மாமா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதவிதமாகச் சாப்பிடுவதை வீட்டு ஜன்னலிலிருந்தே பார்க்க முடியும்.
அபூர்வமாக அப்பா வீட்டிலில்லாத நாட்களில் ஐஸ்க்ரீம் வாங்கித் தருவாள் பாட்டி. ஓரிடத்தில் அமர்ந்து மெதுவாகச் சுவைத்து ரசிக்க விடாமல் ஏதோ திருட்டுக் காரியம் செய்வது போல பயமும் நடுக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
Add Comment