வெளிநாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி பெரும் தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு நடுத்தெருவில் கழற்றிவிடும் ஏஜென்ஸிகளை எத்தனையோ சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. நம்பகமற்ற நபர்களின், ஏஜென்ஸிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி உடைமைகளையும், சொத்துக்களையும் விற்று, குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிட்டு வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஏகப்பட்ட இலவச அறிவுரைகள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இத்தனை இருந்தும் என்ன பலன்..? ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவதற்கு ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்பதற்கு ரஷ்யாவிலும், உக்ரைனிலும் நடந்து கொண்டிருக்கும் மனிதக் கடத்தல்கள் முதுகுத் தண்டை ஜிலீர் என்று உறைய வைக்கும் உதாரணங்களாய் திகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்த மோசடியின் கனத்தைப் பார்க்கும் முன்பு, ஏன் இப்படி என்று ஆதி அந்தத்தைக் கொஞ்சம் ஆராய்ந்துவிடலாம்.
உக்ரைனும், ரஷ்யாவும் யுத்தத்தின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கிய போது தம் நாட்டின் ராணுவ இழப்பைச் சரி செய்ய, வெளிநாடுகளில் ராணுவத்தில் பணிபுரிந்து யுத்தங்களில் நேரடிப் பரிச்சயமுள்ளவர்களை உள்ளீர்க்க ஆரம்பித்தன. உக்ரைன் அதிபர் விளாதிமிர் லெனன்ஸ்கி உலக நாடுகளின் ராணுவத்திற்கு அறைகூவல் விடுத்தார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மேலும் ஒருபடி சென்று ஓராண்டு உடன்படிக்கையின் கீழ் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து கொள்ளும் வெளிநாட்டு ராணுவ வீரர்களுக்கு அபரிதமான ஊதியத்துடன், குடியுரிமை வழங்கும் விரைவுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். தனியார் கொலைப்படையான வாக்னர் க்ரூப்பில் இணைவோருக்கும் இச்சலுகைகள் பொருந்தும் என்றும் அதன்படி இமிக்ரேஷன் ஷரத்துக்கள் வளைந்து நெளிந்து கொடுக்கும் என்றும் தடாலடி காட்டினார்.
Add Comment