ஐ.நா. நிர்வாகப் பணிக்குழுவை இஸ்ரேல் தடை செய்துள்ளது. “வடக்கு காஸா தற்போது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களனைவரும் இறக்கும் நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது.” என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ். இப்படி எத்தனையோ அறிக்கைகள் வெளியாகிவிட்டன. பயன் ஒன்றும் இல்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக சமாதானத்தையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது ஐநா சபை. இஸ்ரேல் எனும் நாடு ஏற்படுத்தப்பட்ட போது, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அகதிகளான இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க உருவாக்கப்பட்டது(1949) ஐநாவின் நிவாரணப் பணிக்குழு (UNRWA). இஸ்ரேலை சுற்றியுள்ள காஸா, வடக்குக்கரை, சிரியா, லெபனான், ஜோர்டான் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த ஏழு லட்சம் அகதிகளுக்கு உதவ ஆரம்பித்தது இக்குழு.
ஏறக்குறைய இப்போது பதிமூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் விரட்டப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே. உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள், ஆரம்பப்பள்ளிகள், இதற்குத் தேவையான பயிற்சி முகாம்கள் மட்டுமே இவற்றின் சேவைகள். இஸ்ரேல் ஹமாஸிடையே போர் தொடங்கியதிலிருந்து, சுமார் இரண்டு மில்லியன் அகதிகளைக் குறைந்தபட்ச கண்ணியத்தோடு வாழ வைக்க இவ்வமைப்பு முயல்கிறது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் உதவியோடு தொடங்கப்பட்டாலும், இன்று ஐநா அமைப்பின் உறுப்பினர்களின் நிதியுதவிகளோடு இயங்கி வருகிறது. இப்போது இஸ்ரேல் பாராளுமன்றத்தின் முழு ஆதரவோடு, அவர்கள் நாட்டிற்குள் இக்குழு தடை செய்யப்பட்டுள்ளது.
Add Comment