பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது.
ஜெயச்சந்திரன் அடிப்படையில் ஒரு தாளவாத்தியக்காரர். மிருதங்கக் கலைஞர். இளவயதிலேயே மேடையேறி, தன் தனித்திறனை வெளிப்படுத்தி கேரள அரசின் பரிசு பெற்றவர். சுவாரசியமான விஷயம், இந்த விருது மேடையில் அவர் மிருதங்கம் வாசித்தது, கே.ஜே.யேசுதாஸின் பாடலுக்கு. இருவருமே அன்று பதின்ம வயதுச் சிறுவர்கள். அந்த வயதிலேயே அரசு அங்கீகாரமும், ரசிக அங்கீகாரமும் பெற்றனர். ஆனால், பின்னாளில் புகழ்பெற்ற பாடகர்கள் ஆவார்கள் என்பதோ, ஒரு தலைமுறையே இவர்கள் இருவரின் குரல்களைக் குழப்பிக்கொள்ளும் என்பதையோ அன்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பழைய திரைப்படப்பாடல் பதிவு முறைகளில் டிராக் பாடுதல் என்றொரு வழக்கமுண்டு. வாத்திய அமைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதற்காக இசையமைப்பாளரோ, அல்லது இரண்டாம் நிலைப் பாடகர் ஒருவரையோ வைத்துப் பாடலை ஒருமுறை சோதனை ஒலிப்பதிவு செய்வார்கள். அப்படி யேசுதாஸ் பாட வேண்டிய ஒரு பாடலை டிராக் பாடலாகப் பாட தேர்வு செய்யப்பட்டார், அங்கு மிருதங்கம் வாசிக்க வந்திருந்த ஜெயச்சந்திரன். பாடலுக்கு இசையமைத்தவர் தேவராஜன் மாஸ்டர். ஏனோ அந்தப்பாடலை ஜெயச்சந்திரன் பாடிய விதமும், அந்தப்பாடலுக்கான சூழலும் அவருக்குப் பிடித்துப்போக, டிராக் பாடலே இறுதிப்பாடலானது. இப்படி ஒரு மாற்று ஆட்டக்காரராகக் களத்தில் இறங்கிய ஜெயச்சந்திரன், அன்று தனக்கு வந்த முதல் பந்தை எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்தார். பின்னர் களமிறங்கியபோதெல்லாம் அவருக்கு அடித்து ஆட ஏதுவான பந்துகள் போடப்பட்டுக்கொண்டேயிருந்தன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் களத்தில் நின்று ஆடிக்கொண்டிருந்தார்.
Add Comment