“சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றால் மதுரை தமிழ்நாட்டின் கலை நகர். எனவேதான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய வேண்டும் என்று முடிவு செய்ததும் அது மதுரையில் தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்” என்றார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின். “இந்நூலகத்தின் மூலம் தென்மாவட்டங்களில் அறிவுத் தீ பரவப் போகிறது” என்றும் சொன்னார். காமராஜர் பிறந்த நாளில் மதுரையில் இந்நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நூலகம் மதுரை – புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ஆறு மாடிகள், 2.14 லட்சம் சதுர அடிகள் பிரம்மாண்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்நூலகம் சந்தேகமின்றி உலகத் தரம்.
தமுக்கம் பொருட்காட்சி, மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள கோவில்கள் தவிர எந்தப் பொழுதுபோக்குத் தளமும் இல்லாத ஊர் மதுரை. ஆனால் மதுரை மக்கள் அவற்றை என்றுமே பெரிதாக நினைத்ததில்லை. புதிய வரவிற்கு என்றுமே அவர்கள் ஆதரவு உண்டு. இந்நூலகம் மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி அவர்கள் கண்டிப்பாகப் பார்க்கவும் பயன்படுத்தவும் தவறாத ஒரு இடமாக வருங்காலத்தில் மாற இருக்கிறது. சமீபத்தில் அமைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகமும் அதற்குக் கிடைத்துவரும் மக்களின் ஆதரவும் இதற்கொரு முன் உதாரணம்.
நூலகத்தை கண்முன்னே கொண்டுவந்து சுற்றிக்காட்டியது போன்று சிறப்பான விவரிப்புடன் அமைந்திருந்தது கட்டுரை. தகவல்கள் சிறப்பு! நன்றி!