இந்தியாவில் இணையம் பிரபலமாகிய தருணத்தில் கணினியில் தமிழ் என்பதை முன்வைத்து ஒரு மாநாடு சென்னையில் நடந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு பிரபலமாகும் நேரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் மீண்டும் மாநாடு நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில் நடந்தது கணித்தமிழ்24 மாநாடு.
தமிழில் மின்னஞ்சல் அனுப்பினால் கூடவே எழுத்துருவையும் அனுப்பி வைத்த காலம் ஒன்றுண்டு. இணையத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பிளாப்பி டிஸ்க் (Floppy Disk) எனப்படும் புராதனக் கருவியில் எழுதியதையும் எழுத்துருவையும் சுமந்தலைந்தார்கள். பல்வேறு நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த தமிழர்கள் ஆளுக்கொரு எழுத்துருக் குறியீட்டினை வைத்துக் கொண்டு இதுதான் சரியென்று வலுவான வாதங்களை எடுத்துவைத்த நேரம் அது.
Add Comment