தமிழகத்தில், குறிப்பாக, தென் தமிழகத்தில் புகழ்பெற்றது சூரசம்ஹாரத் திருவிழா. திருச்செந்தூரில் நடைபெறும் மகாசஷ்டித் திருவிழாவின் முக்கியமான அம்சம். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இந்த விழா, 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
பழனிக்குத் தைப்பூசம், திருத்தணிக்குக் கிருத்திகை, திருச்செந்தூருக்கு சூரசம்ஹாரம் எனப் பிரித்து வைத்துள்ளனர் பக்தர்கள். கொண்டாடுவதற்குக் கடவுள் காரணமா கொடுக்க வேண்டும்? மற்ற விழாக்களில் இல்லாத ஒன்று இந்த சஷ்டிக்கு இருக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர் நடைப்பயணம் நடக்கும். இதற்காக மக்கள் பலவிதமான விரதங்கள் இருந்து வழிபடுவது வழக்கம். விரதங்கள் என்றால் சாதாரண விரதங்கள் அல்ல.
மிளகு, பழம், பால், பருப்பு, தண்ணீர், இளநீர், மாவு, ஒரு பொழுது எனப் பலவிதமான விரதங்கள் உள்ளன. ஆறு நாள்கள் பக்தர்கள் மேல்குறிப்பிட்டவற்றை மட்டும் அருந்தியோ, உண்டோ விரதமிருப்பது வழக்கம். இதில் கடுமையான விரதம் என்றால் மிளகு விரதம்தான். ஒரு நாளுக்கு ஒரு மிளகு. தேனில் ஊறியது. இரண்டாம் நாள் இரண்டு. இப்படி ஆறு நாள்களும் ஒவ்வொன்றாய்க் கூட்டிக்கொள்ள வேண்டும். இது தவிரத் தண்ணீர் மட்டுமே அருந்தலாம். வேண்டுதல் எவ்வளவு கடினமோ விரதமும் அந்தளவு. பருப்பு, மாவு விரதம் இருப்பவர்கள் உப்பு சேர்த்துக் கொள்வதில்லை.















Add Comment