மிஷல் ஒபாமா
மிஷல் ராபின்சன். பின்னாளில் மிஷல் ஓபாமா. அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க முதல் பெண்மணி.
மிஷல் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது அப்பா ஃப்ரேஸர் ராபின்சன், நகர கழிவுநீர் மேலாண்மை நிறுவனத்தில் வேலை செய்தார். அம்மா மேரியன் ராபின்சன் இல்லத்தரசி. இரண்டு வயது மூத்த அண்ணன் கிரெய்க். குடும்பத்தில் பணம் குறைவுதான், ஆனால் அன்பு மிகுதி. எலிமென்டரி பள்ளியில் படிக்கும்போதே மிஷல் ஒரு திறமையான மாணவி.
அண்ணன் கிரெய்க் கூடைப்பந்து வீரனாகச் சிறந்து விளங்கியதற்காக தந்தை கார் பரிசளித்தார். ஒருமுறை கிரெய்க் தன் புதிய காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவனை நிறுத்தி ‘இந்த கார் உன்னுடையதா? எங்கே திருடினாய்?’ என்று விசாரித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கார் வாங்கிய விவரங்களைக் காட்டிய பின்னர் விடுவித்தனர். இந்நிகழ்வு மிஷலுக்கு இனபேதத்தின் யதார்த்தத்தைக் காட்டியது.
மிஷல், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிக்கச் சேர்ந்தபோது வாழ்க்கையின் இன்னொரு கசப்பான உண்மையை அறிந்தார். அங்கிருந்த மொத்தம் 1,200 மாணவர்களில் 100 மாணவர்கள் மட்டுமே கறுப்பினத்தவர். அவருடைய அறைத்தோழி கேத்தி முதலில் நட்பாக இருந்தாள். ஆனால் அன்று இரவே கேத்தி தன் அம்மாவுக்கு ஃபோன் செய்து ‘என் அறைத்தோழி கறுப்பினத்தவள். என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனக்கு அறையை மாற்றித் தரப் பேச முடியுமா?’ என்று கேட்டாள். அந்த அனுபவம் வேதனையாக இருந்தாலும் மிஷலை வலுவாக்கியது.















Add Comment