தொல்லியல் மற்றும் பழங்காலத் தமிழ் மரபுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் தற்போது மக்களிடம் வளர்ந்து வருகிறது. நாகரிகம், மரபின் மேன்மை, பொருளாதாரம், வணிகம் அனைத்திலும் தமிழகம் என்றும் எதிலும் யாருக்கும் சளைத்ததில்லையென அடுத்தடுத்துக் கிடைத்து வரும் ஆதாரங்களும் மகிழ்ச்சி தருவதாகவே உள்ளன.
சமீபத்தில் கவனத்தை ஈர்த்து, இன்று 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதுதான் மதுரையை அடுத்துள்ள கீழடி. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்படும் கள ஆய்வுகள், அதன் வெளிப்பாடுகள் இந்நகரத்தின் தொன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
கீழடி அகழாய்வுப் பகுதி மதுரையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது. ஊரணிகள், கண்மாய்கள், வைகைஆறு என்று இயற்கையால் சூழப்பட்டிருந்த பகுதி இது. இப்பகுதியில் 2015-ல் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கீழடியின் கட்டடக்கலை குறித்த தெளிவுகளும் அரும்பொருட்களும் பல்வேறு விதமான ஆதாரங்களும் கடந்தகட்ட ஆய்வுகளில் கிட்டியுள்ளன. சுடுமண் கிணறு, அக்காலத்தில் பயன்படுத்திய தங்கக் காசுகள், செவ்வண்ணப் பூச்சுப் பானைகள், ரௌலட்டட் கலன்கள், ஆயுதங்கள், பவள மணிகள், சுடுமண் விளக்குகள், இரும்பு விளக்குகள் எனப் பல விதமான ஆதாரங்கள் கிட்டியுள்ளன.
Add Comment