புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது நவராத்திரி. மரப்பாச்சிகள், கடவுள், காந்தி தாத்தா முதல் ஐபிஎல் செட் வரை விதவிதமான பொம்மைகளைப் படிகளில் அடுக்கி, சுற்றத்தாரை அழைத்து மகிழ்விக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஆந்திரப் பிரதேசத்தில் பொம்மலா கொலுவு என்றும், கர்நாடகாவில் பொம்பே ஹப்பா (Bombe habba) என்றும் நவராத்திரி அழைக்கப்படுகிறது.
சென்னையில் நடைபாதையில் தொடங்கிப் பெரிய கடைகள் வரை பொம்மைகள் விற்பனை களைகட்டி விட்டது. மயிலாப்பூர், டிநகர் பிளாட்ஃபாரக் கடைகள், திருவல்லிக்கேணி பொம்மைச் சத்திரம் போல தமிழக அரசால் நடத்தப்படும் காதி கிராஃப்ட் கடைகளும் கொலு பொம்மைகளுக்குப் பிரபலம்.
குறளக வளாகத்தில் இருக்கும் காதி கிராஃப்ட்டில் செப்டம்பர் பதினான்காம் தேதியிலிருந்து அக்டோபர் மாத இறுதி தேதி வரை கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெறுகிறது. அதற்காக விஸ்தாரமான இடம் ஒதுக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட பொம்மை ஸ்டால்கள், டீ,காபி, டிஃபன் விற்கும் கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
simple yet informative