கைமாறிய சிம்மாசனம்
அன்றிரவு மழை வேகமெடுத்திருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மோதி, மழை எழுப்பிய இரைச்சல் சாதனாவை உறங்கவிடவில்லை. அம்மழையோசை அவள் மனதோசையின் எதிரொலியைப் போன்றிருந்தது. அவ்விரவுப் பொழுது நீண்டதாக இருக்குமெனச் சாதனாவிற்குத் தோன்றியது.
சாதனாவிற்குப் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில் வேலை. தோழிகள் இருவருடன் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஃப்ளாட் எடுத்துத் தங்கியிருந்தாள். அவளொரு சராசரி சாஃப்ட்வேர் பிராணி. வேலை, ஷாப்பிங், பாய் பெஸ்ட்டி, ட்ரிப், ஈ.எம்.ஐ, இன்ஸ்டாக்ராம். இவை தான் அவளுலகம். தேடிச்சோறு நிதம் தின்று சந்தோஷமாகத் தான் இருந்தாள்.
அன்று மாலையே வானம் இருட்டியிருந்தது. வங்கக்கடலை ஜெராக்ஸ் எடுத்தது போலக் கனத்த கருமேகங்கள் வானில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. மொட்டை மாடியில் நின்று விதவிதமாய் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள் சாதனா. அவளுடன் தங்கியிருந்த தோழிகள் இருவரும் இந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்ததால் சாதனா மட்டும் தனியாக இருந்தாள்.
Add Comment