ஜின்னோடு ஐவரானோம்
சாட்ஜிபிடி பிறந்த வருடம் இரண்டாயிரத்து இருபத்திரண்டு. அப்போது இருவேறு கருத்துகள் இருந்தன. “வாவ்… மேஜிக்” என்று ஒரு கூட்டம். “உளறுதுப்பா” என்று கோட்டுக்கு அந்தப் பக்கம்.
தொடக்கத்தில் கவிதை எழுதிப்பார்த்தனர். “என்னப் பத்திச் சொல்லேன் பாப்போம்” என்று சிலர். “ஹோம்வொர்க்லாம் அதுவே செஞ்சுடும்ல” மழை ரமணனுக்கு அடுத்து பள்ளிக்குழந்தைகளை மகிழ்வித்தது சாட்ஜிபிடியாகத்தான் இருக்கும். ஆசிரியர்கள் பாடு திண்டாட்டமானது.
ஓப்பன் ஏஐகாரர்கள் கஜினி முகம்மது போலப் படையெடுத்துக்கொண்டே இருந்தனர். ஓரிரு மாதங்கள் இடைவெளியில் புதிய வெர்ஷன் என்று கலர் கலராகப் போஸ்டர் அடித்துக் கொண்டாடினர்.
இதுபோக சாட்ஜிபிடிக்கு போட்டிக் கடைகளும் வந்தன. தங்கள் பங்கிற்கு அவர்களும் குறளி வித்தை காட்டினர். இதற்கு முன், இயலாது என்று எண்ணியிருந்தவை பலவும் சாத்தியமாயின. இது பாஸிங் க்ளவுட் இல்லை என்று பலருக்கும் புரிந்தது. ஏஐ யுகம் தொடங்கியது.
இன்னமும் சாட்ஜிபிடி மூன்று வயதுக் குழந்தைதான். ஆனால் தொடங்கிய போது இருந்த நிலையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். கவிதை, சுயதம்பட்டம் எல்லாம் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. மருந்து கண்டறிவது, சாஃப்ட்வேர் செய்வது எனச் சிக்கலான செயல்களில் ஏஐ அடியெடுத்துவைத்திருக்கிறது.
Add Comment