ப்ராம்ப்ட் எனப்படுவது யாதெனின்…
ப்ராம்ப்ட் என்பது வெறுமனே ஒரு கேள்வியல்ல. அது நாம் கொடுக்கும் ஆணை. நாம் விரும்பும் செயலை ஏ.ஐ திருத்தமாகச் செய்து முடிப்பது இந்த ஆணையைப் பொருத்ததே. ஓர் உதாரணம்: கவர்மெண்ட் ஆர்டர்களைப் (GO) பார்த்திருப்பீர்கள். நாளை விடுமுறை என்பது தான் செய்தியாக இருக்கும். ஆனால் நாளை விடுமுறை என்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருக்காது.
குழப்பமில்லாமல் விளக்கியிருப்பார்கள். யாருக்கெல்லாம் விடுமுறை? யாரெல்லாம் கட்டாயம் வேலைக்கு வரவேண்டும்? இதற்கு காம்பென்சேஷன் வேலை நாள் ஏதும் இருக்கிறதா? யார் அறிவிக்கிறார்கள்? இன்னபிற சங்கதிகளுடன் ஒரு பக்க அளவுக்கு அடித்து பச்சை மையில் ஓர் அதிகாரி கையெழுத்திட்டிருப்பார். அந்தக் கையெழுத்துக்குக் கீழே சில உபதெய்வங்களின் அனுமதியும் வரிசைகட்டி நிற்கும்.
மேம்போக்காகப் பார்த்தால், வெட்டிவேலை போலத் தான் தோன்றும். ஆனால் அரச கட்டளை என்பது லவ் லெட்டர் போலல்ல. நீங்கள் நினைத்ததையெல்லாம் எழுத முடியாது. எதையாவது எழுதிவிட்டு, “நான் அப்டி நெனச்சி எழுதலியே…” என்று ஜகா வாங்க முடியாது. ப்ராம்ப்ட்களும் அரச கட்டளைகள் போலத் தான்.
Add Comment