பெருந்தலைவர் காமராஜ் வழி நடந்த தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் தொண்டர் அனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் காலமானார்.
மதுரையில் கீழமாசி வீதியும் தெற்குமாசி வீதியும் சந்திக்கிற இடம் ஒன்றுண்டு. அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் பெயர்போன இடம். அன்றைக்குப் பெருந்தலைவர் காமராஜரும் சொல்லின் செல்வர் ஈவிகேஎஸ் சம்பத்தும் பேசுவதாக ஏற்பாடாகியிருந்தது. காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் எப்போது நடந்தாலும் தவறாமல் அதில் கலந்துகொள்வது குமரி அனந்தனுக்கு வழக்கமாக இருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். தலைவர்கள் வந்து பேச்சைத் தொடங்கும் வரை பார்வையாளர்கள் கலைந்து செல்லாதவாறு பார்த்துக்கொள்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு. அதற்காகக் கவர்ச்சி நடனங்களை ஏற்பாடு செய்யும் வழக்கம் தமிழக அரசியலில் அப்போது அறிமுகமாகியிருக்கவில்லை. அதனால் பேச்சாளர்கள் யாராவது கட்சியின் கொள்கைகள் சார்ந்து பேசிக்கொண்டிருக்க ஏற்பாடுகள் நடக்கும். அன்றைக்கு அந்த வாய்ப்பு இலக்கியப் பேச்சாளராக அறியப்பட்ட குமரி அனந்தனுக்குக் கிடைத்தது.
அப்படிக் குமரி அனந்தன் மேடையேறிப் பேசிக்கொண்டிருந்தபோது காமராஜர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்துவிட்டார். இதையறிந்த குமரி அனந்தன் அவசர அவசரமாகத் தன்னுடைய பேச்சை முடித்துக்கொள்ளத் திட்டமிட்டார். காமராஜர் குமரி அனந்தனின் தோளில் தட்டிக்கொடுத்துத் தொடர்ந்து பேசச் சொன்னார். சிறிது நேரம் நீண்ட அந்தப் பேச்சை காமராஜரும் சம்பத்தும் ரசித்துக் கேட்டனர்.
Add Comment