கத்தியின்றி ரத்தமின்றி தொடரின் பெரும்பகுதி இவ்வாண்டில் தான் வந்துள்ளது. அத்தொடர் எனக்கு ஒரு புதிய அனுபவம். கட்டுரைகளைக் கதை மொழியில் எழுத முயன்று கொண்டிருந்தேன்.
சைபர் க்ரைம் குறித்த செய்திகள் அனுதினமும் வந்தவண்ணம் இருந்தன. எனவே தகவல்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் ஒரு கதை போல அதை வடிவமைத்து எழுதுவது எனக்குச் சவாலாக இருந்தது.
ஒவ்வொரு எபிசோடிற்கும் சில கேரக்டர்கள். அவர்கள் சைபர் க்ரைமில் சிக்கிக்கொள்ளும் விதத்தை விறுவிறுப்பாகச் சொல்லவேண்டும். முதல் இரண்டு அல்லது மூன்று எபிசோடுகளிலேயே வாசகர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். நிச்சயம் நான் விவரிக்கும் பாத்திரம் சைபர் க்ரைமில் மாட்டிக்கொள்ளும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதாவது, நான் எழுதும் கதையின் முடிவு வாசகர்களுக்கு ஏற்கனவே தெரியும்.
என் இஷ்டத்திற்கும் எழுத முடியாது. நடக்கும் நிகழ்வுகளுடன் ஒத்திருக்க வேண்டும். குறுநாவல் அளவுக்கு நீட்டிக்கொண்டே போகக் கூடாது. எனக்குக் கதை எழுதிப் பழக்கமில்லை.
ஆரம்பத்தில் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. அதன் பின்னர் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் கம்பராமாயண உபன்யாசம் ஒன்று கேட்டேன். ராமாயணக் கதை தெரியாதவர் யார்? ஆனால் அவர் சொன்னவிதம், என்னவாகுமோ… என்னவாகுமோ… என்று த்ரில்லர் ரேஞ்சுக்குச் சொன்னார். அப்போது எனக்கொரு ஃப்ளாஷ் அடித்தது. “இது தான்” என்று புரிந்தது போல இருந்தது.
Add Comment