விமலாதித்த மாமல்லன்
இரண்டு ரேஞ்சுகளுக்குப் பொதுவாக இருந்த போனில் பேசிவிட்டு வந்த மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருதாமே’ என்று, சொன்னதைக்கேட்டு எல்லோரும் சிரித்தனர்.
‘எங்க வருது. நாவல் படிச்சிருக்கேன் படம் பாத்ததில்லே’ என்று, எதிர்ப்பக்க நாற்காலியில் அமர்ந்து அமைதியாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த நரஹரி பரபரத்துக் கேட்டான்.
அதைப் பார்த்து, மணி சார் உட்பட எல்லோரும் முன்பைவிட பலமாகச் சிரித்தார்கள்.
‘இது படம் இல்லே. வேற விஷயம். அப்பறம் சொல்றேன்’ என்றார் மோகன். எல்லோருக்கும் தெரிந்திருப்பதால்தானே எல்லோரும் சிரிக்கிறார்கள். அதை ஏன் அப்புறம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.
மதியம் வந்து எல்லோரிடமும் கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்ட டிகோஸ்டாவைத்தான் மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது, எல்லோரும் குசுகுசுவென பேசிக்கொண்டதிலிருந்து தெரியவந்தது. இருந்தும் அவர் ஏன் அப்படிக் குறிப்பிட்டார் என்பது தெரிய கொஞ்சநாள் ஆனது.
அதற்குள் தனக்குத் திருமணம் என்று டிகோஸ்டா வந்து எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.
Add Comment