இந்தியச் சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில், ஜனவரி 7ஆம் தேதி தனது 83ஆவது வயதில் புனேவில் காலமானார். இந்தியாவில் சூழலியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியச் சிந்தனையாளர். ஆறு தசாப்தங்களாக இயற்கை வளங்களைக் காக்கத் தீவிரமாகப் போராடியவர். மக்களின் விஞ்ஞானி என்று பரவலாக அறியப்பட்டவர்.
2024ஆம் ஆண்டு, வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் நானூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அச்சமயம் மாதவ் காட்கிலின் பிரசித்தி பெற்ற அறிக்கை கேரள ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. 2011ஆம் ஆண்டிலேயே அவர் வயநாடு நிலச்சரிவைக் கணித்திருந்தார்.
மாதவ் காட்கில், மகாராஷ்டிராவிலுள்ள புனேவில் 1942ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை தனஞ்ஜய ராவ் காட்கில், ஒரு தேர்ந்த பொருளாதார நிபுணர். தனது ஒன்பதாவது வயதில், அண்டை வீட்டுக்காரரான புகழ்பெற்ற சமூகவியலாளர் இராவதி கர்வேயுடன் நெருக்கமாகிறார் மாதவ். அவருடன் களப்பணிக்காகக் குடகு மலைக்குச் செல்லும் வாய்ப்பு அமைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பச்சைப் பசுங்குவியல்கள் அவரை பெரிதும் கவர்கின்றன. மழைக்காடுகளின் இதமான பசுமை அவரை ஈர்க்கிறது. பறவையியல் அறிஞரான சலீம் அலியுடனும் நட்பு ஏற்படுகிறது. பறவைப் பார்த்தலில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.














Add Comment