2024-க்கு ஒரு நோக்கம் வேண்டாமா?. நாற்பது கட்டுரைகள். ஒரு தொடர், ஒரு புத்தகம் இது தான் எனது தற்போதைய எண்ணம். இதைத் தவிர வாங்கி வைத்துள்ள புத்தகங்கள், குறைந்தது இன்னும் ஐந்து முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து முடிக்க வேண்டும்.
சென்ற ஆண்டு ஆரம்பத்தில் முதல் ஆண்டறிக்கை எழுதியபோது இப்படித் தான் முடிந்தது. இந்த ஆண்டு மட்டும் மெட்ராஸ் பேப்பரில் நாற்பத்து ஆறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐம்பத்து இரண்டு வாரங்களும் எழுத வேண்டும் என்பது தான் இலக்கு. இப்பொழுது அணியிலிருப்பவர்களுக்குள் போட்டி அதிகம் ஆகிவிட்டது. choose the best என்ற கொள்கையைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார் ஆசிரியர் பாரா. அதில் கொஞ்சம். எனது சோம்பேறித்தனத்தில் கொஞ்சம் என்று எண்ணிக்கை தவறிவிட்டது. எனக்கு அதில் வருத்தம் தான். அடுத்து அந்தத் தொடர் சமாச்சாரம். சில ஐடியாக்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதை விடுத்து சில எனக்கே தோன்றவில்லை. ஆகவே அது டீலில் விடப்பட்டுவிட்டது.
ஒரு புத்தகம். இந்த ஆண்டு ஜீரோ டிகிரி போட்டியை வைத்து ஒரு நாவல் எழுதத் தொடங்கினேன். ஆரம்பிக்கும்பொழுது இருந்த வேகம் சற்றே மட்டுப்பட்டுவிட்டது. அலுவலக ரீதியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் மற்றொரு காரணம். “எழுத்தாளர்களுக்கு எழுத மட்டுமே காரணம் தேவை. எழுதாமல் இருப்பதற்கல்ல” என்பார் பாரா.
ஒரு நாவலுக்கு முப்பதாயிரம் வார்த்தைகள் என்ற மலைப்பான எண்ணிக்கை என்னைச் சற்று சுணங்கச் செய்து விட்டது. ஒரு நாவல் அல்லது புத்தகம் எழுதுவதற்கு உண்டான, தேவையான எழுத்து ஒழுக்கம் எனக்குக் கைவரவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை. புத்தகம் எழுதினால் தான் எழுத்தாளராகவே நம்மை நினைப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு இல்லாமல் தான் இருந்தது. வேறொரு பதிப்பாளரிடம் யதேச்சையாகப் பேசியபோது “விக்குதோ விக்கலையோ ஒரு புக் வந்துருச்சா. அந்த அட்டைப்படத்தை பொது வெளில போடுங்க. எழுத்தாளர்னு எஸ்டாபிளிஷ் ஆய்டுவீங்க” என்றார். எனக்குச் சுருக்கென்றது.
Add Comment