புத்தாண்டுச் சபதங்கள் எடுப்பதில்லை என்ற சபதத்தை எடுத்துக் கொண்டிருந்த என்னை மாற்றியது ‘ஹலோ எப்.எம்.’மின் அலைவரிசையான 106.4. ஏனெனில் அது தான் 2021 ஆரம்பத்தில் எனது உடல் எடை. இதைக் குறைந்தது இரண்டு இலக்கங்களாகவாவது மாற்றி விட வேண்டும் என்பது என் ஒரே நோக்கம். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். டிசம்பர் 2022-இல் எனது எடை ரேடியோ சிட்டியாக (91.1) மாறியது.
இதே வேகத்தில் அடுத்த ஆண்டுக்காக (2023) நான் எடுத்த சபதம்தான் எழுத வேண்டும் என்பது. கவனிக்கவும். நன்றாக எழுத வேண்டும் என்பது அல்ல. எழுத வேண்டும் என்பது மட்டுமே… பேஸ்புக்கில் திரை விமரிசனம், சுய எள்ளல் பதிவுகள் என்று சிறிது சிறிதாக எழுதி வந்தேன். ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் திரை விமரிசனங்கள் என் மனநிலைக்கேற்ப எழுதுவேன். இதைத் தவிர முறையாக ஒரு எழுத்து ஒழுங்கு என்பது எனக்கில்லை.
ஆசிரியர் பாராவுடன் பேஸ்புக் தொடர்பில் இருந்ததால் எழுதுதல் பயிற்சிகுறித்து வந்த புக்பெட் அறிவிப்பு ஒரு பெரிய வரம். ‘கண்டேன் சீதையை’யென வகுப்பில் சேர்ந்தேன். 1991-க்கு பிறகு வகுப்புகளில் கலந்து கொண்டு ஒரு மாணவனாக உணர விதிக்கப்பட்ட தருணம். வார இறுதி நாட்கள் பயிற்சிக்கென்று ஒதுக்கப்பட்டன. சினிமா, டிவி, ஊர் சுற்றல் போன்றவை கட்டுக்குள் வந்தன. பயிற்சிகள், அசைன்மென்டுகள், உரையாடல்கள், அலசல்கள் என்று சுவாரசியமாகக் கழிந்த நாட்கள். சில மாதங்கள் கழித்து ஆசிரியரிடமிருந்து ஒரு வரித் தகவல். ‘மாலையில் மீட்டிங். லிங்க் வரும். கலந்து கொள்க’. ஆரம்பித்தது மெட்ராஸ் பேப்பருடன் ஒரு எழுத்துப் பயணம்.
கலக்கிட்டீங்க மதுசார்… உடல் எடையை பண்பலை அலைவரிசையோடு ஒப்பிட்டுச் சொல்லியது புதிதாக நன்றாக இருந்தது.