ஒரு ஸ்மார்ட்போனும் இன்டர்நெட் இணைப்பும் மட்டுமே இருந்தால் போதும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கற்க முடியும். பெரும் பொருட்செலவு இல்லாமல். இச்சிறப்பான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன டிஜிட்டல் தொலைநிலை வகுப்புகள். இவை “மூக்” (MOOC – Massive Open Online Courses) என்னும் பெயரில் உலகெங்கும் பிரசித்தியடைந்துள்ளன.
கற்றல் கற்பித்தல் முறைகள் காலந்தோறும் மாறிக்கொண்டே தான் வந்துள்ளன. குருகுலக் காலம் முதல் கூகுள் காலம் வரை நீண்ட பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது நாம் கல்வி கற்கும் முறை. இன்டெர்நெட் நமது வாழ்வின் முக்கிய அங்கமாகியுள்ளது. இன்டர்நெட்டை இரண்டாவது மின்சாரம் என்றே கூறலாம். இது தொடாத துறைகளே இல்லை. கற்றல் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? சொல்லப்போனால் இன்டர்நெட்டால் பெருமாற்றம் பெற்றிருக்கும் துறைகளுள் கல்வித்துறையே முதன்மையானது.
“நானெல்லாம் யூ-ட்யூப் பாத்தே படிச்சுடுவேன். இந்தக் கோர்ஸ்லாம் தேவையில்லை” என்பது மேலோட்டாமாய்ச் சரியென்றே தோன்றும். ஆனால் நிதர்சனம் அப்படியில்லை. முறைப்படி எந்தவொன்றையும் கற்பதில் பல பரிமாணங்கள் உள்ளன. பல படிநிலைகளும். ஒரு வீடியோ உங்களுக்குத் தகவல்களைத் தரலாம். ஆனால் தன்னளவில் அதுவே ஒரு பாடமாகி விடாது.
informative and useful one sir