பெரிய ஆலமரத்துக்குப் பக்கத்திலிருக்கும் சிறு சிறு பூண்டுகளுக்கொரு சின்னக் கொடுப்பனவு இருக்கிறது. ஆலமரம் தனக்காக சமைத்த உணவு மேலதிகமாக இருந்தால் பூண்டுத்தாவரத்துக்கு தகவல் சொல்லியனுப்பும். பின்னர் அவை ஒப்புக்கொண்டால் உணவைக் கொடுத்தும் அனுப்பும். இவர்களிருவருக்குமிடையில் அங்கும் இங்கும் பரிமாற்றம் புரியும் ஏஜன்ட் யார் தெரியுமா? பூஞ்சணவிழைகள். மரங்களோடு ஒன்றித்து , மண்ணுக்கடியில் வாழும் இவற்றை வேர்ப்பூஞ்சணக் கூட்டம் என்று செல்லமாக அழைக்கிறது அறிவியல் உலகம். அண்மையில் இந்தக் கூட்டத்தைப் பற்றி, ஒரு பயங்கரமான தகவல் வெளியாகியுள்ளது. அவற்றுக்குப் பேசத் தெரியும்! வெறுமனே தகவல் பரிமாற்றுவதைப் பற்றிக் கூறவில்லை. நம்மைப் போலவே மொழியும் சொற்களும் கொண்டு உரையாடத் தெரியும் என்கிறது அண்மைய ஆய்வு.
பூஞ்சணத்தை வழக்கமாக ஒரு நோய் வடிவிலேயே பார்த்துப் பழகிய நமக்கு, இந்தத் தகவலெல்லாம் பேரதிசயம்தான் . பாணிலோ, கிழங்கு வகைகளிலோ கருமை நிறத்தில் தோன்றும் புள்ளிகளும் பூஞ்சணம்தான். தோலில் தேமல் வடிவில் தோன்றும் படர் தாமரையும் ஒருவித பூஞ்சணம்தான். மொத்தத்தில் இது பெரிய இராச்சியம். விலங்குகளில் எத்தனையோ வகை போல, இந்த ராச்சியத்திலும் மில்லியன் வகையான இனங்கள் உண்டு. ‘ஃபங்கஸ்’ எனும் இவர்களது உறுப்பினர்களுக்கு, ஒழுங்கான கலம், உடல், உணர்வுகள், மூளை , இதயம் என எதுவுமே கிடையாது. வெறுமனே நீண்ட இழை வடிவில் வியாபித்து வளர மட்டுமே தெரியும். ஏதாவது இறந்த உடலோ, மரப்பகுதியோ கிடைத்தால் அங்கே வந்து ஆஜராகி மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கும். அந்த உடலம் மொத்தமாகத் தீரும் வரை மெதுவாகப் புசித்து உண்டு முடிக்கும்.














Add Comment