முத்தமிழ் செல்வி நாராயணன். உலகத்தின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடைந்த முதல் தமிழ்ப் பெண். பூர்வீகம் விருதுநகர். வசிப்பது சென்னையில். எவரெஸ்ட் சிகரம் இவரது சாதனைப் புத்தகத்தின் ஒரு பக்கம்தான். ஏழு கண்டங்களிலும் இருக்கும் உயரமான சிகரங்களை வெற்றிகரமாகத் தொட்டுத் திரும்பியுள்ளார்.
இவையனைத்தையும் திட்டமிட்டுச் செய்து முடிக்க இயல்பாக ஒருவருக்கு நான்கு முதல் ஆறு வருடங்கள் பிடிக்கலாம். ஆனால் முத்தமிழ் செல்வி இதனை இரண்டு வருடங்கள் இருபத்துநான்கு நாள்களில் சாத்தியப்படுத்தியிருக்கிறார். அதாவது எழுநூற்று ஐம்பத்தைந்து நாள்கள். இந்த மிகக் குறுகிய காலக்கட்டத்தில் பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் மலையேற்ற அனுமதி, அந்தந்த நாட்டிற்கான விசா அனுமதி என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மலையேற்றத்தையும் முடித்திருக்கிறார். இதன்மூலம், இந்தியாவின் ‘Fastest woman 7 Summiter’ என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.
கடந்த ஜூன் பதினாறாம் தேதி, வடஅமெரிக்காவிலேயே உயரமான சிகரமான டெனாலியின் உச்சியை அடைந்து திரும்பியிருந்த முத்தமிழ் செல்வியைத் தொடர்புகொண்டு பேசினோம். வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கம் (பெட்னா) விருது விழாவிற்காக தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் முத்தமிழ் செல்வி. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர் செய்த சில செயல்கள் பல்வேறு உலகச் சாதனைகளாகக் கவனம் பெறும் என நினைக்கவில்லை எனப் பேசத் தொடங்கிய முத்தமிழ் செல்வி, அவரது மலையேற்ற அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.















Add Comment