நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம் நடந்திருப்பது அந்த அளவுக்குப் பிரபலமாகவில்லை என்றாலும் அவசியம் பொருட்படுத்தி கவனிக்க வேண்டியதே ஆகும்.
ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆமிர் கான் முட்டாகியும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் துபாயில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இரு நாடுகளுக்கிடையிலான வழக்கமான நல்லுறவுப் பேச்சுவார்த்தை அல்ல இது. சற்றுப் பெரிது. முக்கியமானதும்கூட.
இந்தப் பேச்சு வார்த்தைகளின் தொடர்ச்சியாக ஆப்கனிஸ்தானை ஆளும் தாலிபன் அரசு, இந்தியாவைத் தனது முக்கியமான பிராந்திய-பொருளாதாரக் கூட்டாளியாக அறிவித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் இது பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளுள் ஒன்று. ஆப்கனிஸ்தானைப் பொறுத்த அளவில் தாலிபன்கள் பதவி ஏற்றதிலிருந்து (2021) நிகழ்ந்துள்ள முதல் மாபெரும் திருப்புமுனைச் சம்பவம்.
இந்தச் சந்திப்பு மற்றும் அறிவிப்பின் பின்னணியைச் சிறிது கூர்ந்து கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் இரான் அரசுடன் இந்தியா ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அது பத்தாண்டு கால ஒப்பந்தம். இரானின் சபாஹர் (Chabahar) துறைமுகத்தை மேம்படுத்தவும் தனது தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவுமாக இந்தியா சம்மதித்துக் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தம், மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்தியாவின் வர்த்தக வளர்ச்சி சார்ந்தது. இரான் மட்டுமல்லாமல், ஆப்கனிஸ்தான், இதர பல மத்திய ஆசியக் குடியரசுகளுக்கு இந்தியச் சரக்குகள் சுலபமாகக் கொண்டு செல்லப்பட இந்த ஏற்பாடு கணிசமாக உதவும்.
Add Comment