இந்தியாவின் வடக்கு எல்லை எப்போதும் சிக்கலுக்குரிய பகுதி. எதிர்வரும் மாதங்களில் எப்போதும் உள்ள சிக்கல்கள் சற்றுப் பெரிதாகலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தான் தரப்பிலும் சரி; சீனாவின் தரப்பிலும் சரி. அவரவர் அரசியல் செயல்திட்டங்களுக்கேற்ப அவ்வப்போது நமது எல்லைகளில் அத்துமீறுவது வழக்கமே ஆயினும் ஒரே சமயத்தில் இரண்டு நாடுகளின் அத்துமீறல்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி இதுவரை நேர்ந்ததில்லை. அநேகமாக இப்போது அது நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது போலத் தெரிகிறது.
சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ, ‘இந்தியா தேடும் மசூத் அசார், ஹஃபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைகளின் நிமித்தம் நாடு கடத்துவதில் பெரிய சிக்கல் இராது’ என்று பேசியிருந்தார். அவர் முன்னாள் அமைச்சர்தாம். அவர் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று தோன்றலாம். உண்மையில் இன்றைய பாகிஸ்தான் அரசின் பல உயரதிகாரிகளும் சில அமைச்சர்களுமே இந்த மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. பதவியில் உள்ளவர்கள் பேச முடியாததை முன்னாள் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகச் சொன்னார். அவ்வளவுதான்.
ஆனால் இதன் விளைவுகளைக் கவனிக்க வேண்டும். பிலாவல் புட்டோவை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் தீவிரவாத இயக்கங்களும் அவற்றின் தலைவர்களும் கண்டித்துப் பேசத் தொடங்கியிருப்பது ஒரு புறம் இருக்க, சத்தமில்லாமல் மசூத் அசார் தன் தம்பியும் தளபதியுமான தல்ஹாவுடன் ஆப்கனிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகப் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆப்கனிஸ்தானை ஆளும் தாலிபன் தரப்பில் இருந்து இதுவரை யாரும் இதைப் பற்றிப் பேசவில்லை.















Add Comment