தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு கட்சி இல்லை என்ற நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தபோது கட்சி தொடங்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை வரை உயர முடிந்தது. எனினும் தங்களுக்கு மாற்றாக இன்னொரு சக்தி உருவாவதை விரும்பாத இரண்டு கட்சிகளும் விஜயகாந்த் மீதான திட்டமிட்ட கேலிப்பேச்சுகளால் அவரை காலி செய்தன. இரு ஆளுமைகளும் மறைந்துவிட்ட வெற்றிடத்தை நிரப்ப நினைத்த ரஜினி, தன் உடல்நிலையைக் காரணம் சொல்லி அரசியலுக்கு நுழையாமலே வெளியேறியது, தமிழருவி மணியனுக்கு மட்டுமே அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவமாக முடிந்து விட்டது.
திராவிட இருட்டில் வெளிச்சம் தேடி டார்ச் லைட்டோடு அரசியலுக்கு வந்த கமலஹாசன் அந்த இருட்டிலேயே கரைந்து போய்விட்டார். ஒரே ஒரு தேர்தல் தோல்வியால் ஒட்டுமொத்தக் கட்சியையும் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக அடகுவைத்து விட்டார். திராவிடத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலைக் கையிலெடுத்த சீமான் இப்போது வரை தனியாகவே தேர்தலைச் சந்தித்து வருகிறார். இன அரசியலை முன்வைக்கும் சீமானின் காட்டுக் கூச்சலையும் கட்டுக் கதைகளையும் கேட்பதோடு நிறுத்திவிடுகிற தமிழக வாக்காளர்கள் அவரை ஒரு மாற்று சக்தியாக எப்போதும் நினைக்கவில்லை.














Add Comment