சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ராடோ மற்றும் சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் சுமார் 700 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறை முன்னர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
1937ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் (ஏஜேஎல்). இந்த நிறுவனத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். ஐந்து இலட்ச ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் எந்தத் தனி நபருக்கும் சொந்தமானதல்ல எனத் தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் 1938ஆம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தியது. உருது மொழியில் குவாமி அவாஸ், இந்தியில் நவஜீவன் ஆகிய நாளிதழ்களும் வெளியிடப்பட்டன.
நாடறிந்த தலைவர்களால் வடிவமைக்கப்பட்டு வெளியாகிக்கொண்டிருந்த நேஷனல் ஹெரால்ட் பொதுமக்களிடம் சிறந்த தேசியவாதப் பத்திரிகை எனப் பெயர் பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட இந்தப் பத்திரிகையில் நேரு எழுதிய தலையங்கங்கள் புகழ் பெற்றவை. காத்திரமான விமர்சனங்களை முன்வைத்ததால் 1942ஆம் ஆண்டு முதல், மூன்றாண்டுகள் தடை செய்யப்பட்டது.
Add Comment