சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 25 ரிசார்ட்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெற்று வரும் கட்டுப்படுத்தப்படாத சுற்றுலாச் சுரண்டலுக்கு எதிராகவும், யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் உயிர்நாடியாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல லட்சம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. யானைகள் தொடங்கிப் பல அரிய கானுயிர்கள் வாழும் பல்லுயிர் வளம் மிக்க இந்த மலைத்தொடரில் தென்னிந்தியாவை வளப்படுத்தும் பல ஆறுகள் உருவாகின்றன. ஐநாவால் உலகப் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலைத்தொடரில் பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன.
சமீப காலமாக ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியாலும், போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பாலும் இந்தச் சுற்றுலாத் தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள ஊட்டி,கொடைக்கானல் போன்று மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் கோடை வாசஸ்தலங்களுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் வந்து குவிகின்றனர். கோடைக்காலத்தில் மட்டுமல்லாது, வருடம் முழுக்கவே இந்தச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்தப் பகுதிகளில் குவிகிறது.














Add Comment